Print this page

தொடரும் சீரற்ற காலநிலை – நாட்டின் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80 வீதத்தை எட்டியது

November 06, 2021

தொடரும் சீரற்ற காலநிலை – நாட்டின் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80 வீதத்தை எட்டியது!

 

இலங்கையில் 73 நீர்த்தேக்கங்களில் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80 வீதத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது இராஜாங்கனை, அங்கமுவ, தெதுரு ஓயா, தப்போவ மற்றும் வெஹரகல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர், பொறியியலாளர் டீ.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தலா 4 அடி உயரத்திற்கும் 2 வான்கதவுகள் தலா 3 அடி உயரத்திற்கும் மேலும் 2 வான்கதவுகள் தலா 2 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி, விநாடிக்கு 5500 கன அடி நீர் வௌியேற்றப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தை அண்மித்த அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தலா 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 1,200 கனஅடி நீர் வௌியேற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்டத்திலுள்ள தெதுரு ஓயாவில் 2 வான்கதவுகள் தலா 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 5,500 கன அடி நீர் வௌியேற்றப்படுவதாக அவர் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தின் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் 6 அங்குலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 500 அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வெஹரகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவாக காணப்பட்ட போதிலும் 6 வான்கதவுகள் 6 அங்குலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் அபேசிறிவர்தன தெரிவித்தார்.

இதனிடையே, இன்று காலை 8 மணியுடனான காலப்பகுதியில் காலி – எல்பிட்டிய பகுதிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 115 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் முல்லைத்தீவில் 80 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனிடையே மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது