Print this page

இராஜாங்க அமைச்சரின் அலட்சியத்தால் பறிபோன 10 உயிர்கள்

November 23, 2021

இன்று கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்ததில் பலர் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.

கிண்ணியா நகர சபையையும் பிரதேச சபையையும் இணைக்கும் குறிஞ்சாங்கேணி பாலம் அரசாங்கத்தால் புணரமைப்பு செய்துக் கொண்டிருக்கும் இந்நிலையிலே மாற்று வழியாக படகு பாதையில் ஆற்றை கடக்க முயன்ற கிட்டத்தட்ட 25க்கு மேற்பட்ட மாணவர்களுடன் பலரை ஏற்றிச் சென்ற மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்தவுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி,கடற்படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் அடங்கிய எட்டு (08) மீட்புக் குழுக்கள், ரேபிட் ஆக்ஷன் படகு படை (RABS), மற்றும் சிறப்பு படகு படை (SBS) இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக பூகாரியடி சந்தியில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் இயலாமைக்கும் அலட்சியத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் டயர்களை எரித்தும், அப்பகுதியில் கடைகளை  மூடியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த குறிஞ்சாங்கேணி பாலம் தொடர்பாக பல முறை பாராளுமன்றத்தில் பேசப்பட்ட போதும் சிறிதும் கவனத்தில் கொள்ளாத இந்த அரசாங்கம் இன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரது கேள்வியாக இருக்கையில், 'சரியான மாற்று வழிகளை நிர்மாணிக்காமல் பாலத்தை புணரமைப்பது முற்றிலும் கண்டிக்க தக்கது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதும் பதில் கிடைக்கவில்லை. இதனை இராஜாங்க அமைச்சர் நக்கலாக பார்த்தார். இன்று பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இதற்கு யார் பதில் அளிப்பார்' என கிண்ணியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹாருப் இன்று கூடிய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம்  இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது "படகில்  பயனர்களை அனுமதியின்றி ஏற்றி சென்றமையே இந்த விபத்திற்க்கு காரணமாக இருக்கையில் இந்த படகிற்கு அனுமதி வழங்கியது யார் என்பதே இங்கு கேள்வியாக உள்ளது" என  தெரிவித்திருந்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், " 1லட்சம் மக்கள் வாழும் இந்த கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற குறிஞ்சாங்கேணி அனர்த்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2மாணவர்கள் உட்பட 4மாணவர்களும் 3பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் 27000 குடும்பங்களையும் மற்றைய பக்கம் 3000 குடும்பங்களையும் இரண்டு பகுதியிலும் 11 பாடசாலைகளையும் கொண்ட பிரதேசத்தில் ஒரு பலத்தை அமைக்க சரியான முன்னாயத்தம் செய்திருக்க வேண்டும். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் " என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.