Print this page

கிளிநொச்சியில் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

December 03, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொருத்தமான காணிகள் அனைத்திலும் பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட காணிகளில் ஒரு பகுதியும், பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான ஒரு பகுதி காணிகளிலும் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியாமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்களை தொடர்ந்து ஜனாதிபதியினால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் சுமார் 2119 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்காகவும், 850 ஏக்கர் காணிகள் மேச்சல் தரைக்காகவும் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த கால யுத்த சூழல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் மேய்ச்சல் தரைகளும் கைவிடப்பட்டன.

இந்நிலையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பான திணைக்களங்களினால் கணிசமானளவு விவசாய நிலங்களும் மேய்ச்சல் தரைகளும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

இதனால் பிரதேச மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன் நாட்டிற்கு பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய விவசாய நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1299 ஏக்கர் காணிகளும் கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவில் 280 ஏக்கர் காணிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 453 ஏக்கர் காணிகளும் பூநகரி பிரதேசத்தில் 87 ஏக்கர் காணிகளும் வன வளம் மற்றும வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பொருத்தமான காணிகளாக அடையாளப்பட்டிருந்தது.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 850 ஏக்கர் காணிகள் மேய்ச்சல் தரைக்குப் பொருத்தமானது எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 04 December 2021 03:31