Print this page

வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்கும் தபால் ஊழியர்கள்

December 13, 2021

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணி தொடக்கம் நாளை நள்ளிரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பல தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை 10 மணிக்கு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரை சந்தித்து தமது கவலைகள் குறித்து கலந்துரையாட உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்கள், உப தபால் நிலையங்கள் மற்றும் முகாமைத்துவ அலுவலகங்களைச் சேர்ந்த சுமார் 25,000 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருடனான பேச்சுவார்த்தையின் போது சாதகமான தீர்வுகள் வழங்கப்படுமாயின் வேலைநிறுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்

Last modified on Monday, 13 December 2021 06:50