Print this page

நடுக்கடலில் நடந்த பரபரப்பு! ஈரான் நாட்டவர்களை மடக்கிப்பிடித்த பொலிஸார்!

February 04, 2022

 

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் வழிகாட்டலில் பொலிஸார் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே ஈரானில் இருந்து போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர்.

இதன் போது, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.