Print this page

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

February 10, 2022

இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் வெளிநாட்டு நபர்களால் கொள்ளையடிக்கபடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டவர்கள் வட மாகாணத்தில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு பலதடவைகள் கொண்டுவரப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அரசாங்கத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சினை சார்பில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருந்த பிரேரணையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் சார்பில் தங்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இந்திய தரப்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதால் தங்களுடைய பிரேரணை வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக வெளிநாடு ஒன்று தங்களுக்கு வாக்குறுதி அளித்த போதும் இந்த நாட்டில் வாழுகின்ற மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்த அரசாங்கத்தால் அவ்வாறானதொரு வாக்குறுதி அளிக்க முடியவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.