Print this page

ஆட்டம் காணும் ராஜபக்ஷ அணி! பாராளுமன்றத்தில் பலர் அதிரடி அறிவிப்பு

ஆளும் கட்சியின் 40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவாக நாடாளுமன்றத்தில் செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 ஆளும் கட்சி எம்பிக்களும் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேச்சைக் குழுவாகச் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானங்களை அறிவித்துள்ளனர்.

இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை குழுவாக செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை ஊடகங்களுக்கு அறிவித்தது.

113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தும் எந்தவொரு குழுவிற்கும் ஆட்சி அமைக்க அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகுமாறு கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.