Print this page

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் உருவாகிறது 'கோட்டாகோகம கிளைகள்'!

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, நேற்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தை அண்மித்த  வீதியில் பொலிஸ்
ட்ரக் வண்டிகள் பல நிறுத்தப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

சில மணித்தியாலங்களின் பின்னர் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் அவை அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில், கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலி நகரில்​ ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில், நேற்றுமுன்தனம் முதல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு நேற்று பகல் சென்ற பொலிஸார், மாலை 04 மணிக்குள் அதனை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இதனிடையே, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரக போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டதையடுத்து, மற்றுமொரு இடத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு அதற்கு “கோட்டாகோகம” என பெயரிடப்பட்டது.

இதனிடையே, காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனிநபர் ஒருவர், அனுராதபுரம் தொடக்கம் கொழும்பு காலி முகத்திடல் வரை நடைபயணத்தை நேற்று காலை ஆரம்பித்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டாகோகம’ கிராமத்திற்கு நீர்கொழும்பில் இருந்து இசைக் கலைஞர்களுடன் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சென்றனர்.

நீர்கொழும்பில் இருந்து நேற்று காலை 7.10 அளவில் புகையிரதம் மூலமாக 150-இற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் நகர மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கொழும்பு நோக்கி வருகைதந்தனர்.

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்ற இவர்கள், கொழும்பு காலி முகத்திடலை 10.15 அளவில் அடைந்தனர்.

நீர்கொழும்பு மக்களும் இசைக்கலைஞர்களும் பாட்டுப்பாடி கோஷங்களை எழுப்பி போராட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளித்திருந்தமை விசேட அம்சமாகும்.