Print this page

இலங்கை கலவரத்தால் தமிழகத்திற்கு ஆபத்து என எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 135 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஹம்பந்தோட்டை சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.