Print this page

மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட துமிந்த சில்வா!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் துமிந்த சில்வா இன்று முற்பகல் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று பிற்பகல் வைத்தியசாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு, துமிந்த சில்வாவை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி, அவரை கைது செய்யுமாறு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட சில தரப்பினர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பை வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை துமிந்த சில்வா விடயத்தில் பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.