Print this page

அரச ஊழியர்களது சம்பளம் வழங்குவதில் சிக்கல் இல்லை

அரச ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க முடியாது என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான சூழல் இல்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு தேவையான பணம் பொதுவாக அந்தந்த நிறுவனங்களின் கணக்குகளில் வைப்பில் இருக்கும்.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணம் கையிருப்பில் இல்லை எனின் உரிய நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆக அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படாது என நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

பணத்தை அச்சிடாமல், சம்பளம் வழங்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற முடியாது என்று அறிக்கைகள் தெரிவித்தன. பணம் அச்சிடுவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் தேவை என்றும், ஆனால் தற்போதைய அரசியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு அத்தகைய அனுமதியை பெற முடியுமா என்பது நிச்சயமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது