Print this page

பிறந்த குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளுக்கு குரங்கம்மை, இதுவரை 05 மரணங்கள்!

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல் புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் குரங்கும்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் இன்று உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குரங்கும்மை காய்ச்சலால் ஆபிரிக்க பிராந்தியத்தில் இதுவரை 05 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், ஏனைய நாடுகளில் இருந்து உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கீடுகளின்படி இந்த நோயின் இறப்பு வீதம் 3 முதல் 6 வீதம் வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், உலகம் முழுவதும் வைரஸ் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் குரங்கும்மை காய்ச்சல் பரவுவதை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

தொற்று நோய் ஒன்றுக்கு உலக சுகாதார நிறுவனம் விடுக்கும் மிக உயர்ந்த எச்சரிக்கை இதுவாகும்.