Print this page

விளையாட்டு துறையில் கிடைத்தது சுகாதார துறையின் நன்மைக்கு

September 17, 2022

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 500,000 டொலர்கள் (சுமார் 180 மில்லியன் ரூபா) காசோலையை நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.

ஆசிய கிரிக்கட் கிண்ணம், ஆசிய வலைப்பந்து கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் முகமாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் புற்று நோயாளர்கள் மருந்துப் பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தியது.

இதனைக் கருத்திற் கொண்ட ஜனாதிபதி, பிரச்சினையை துரிதமாக ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, மஹரகம வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி, பணப் பற்றாக்குறையே மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் ஷானுக கருணாரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி பெரேராவுடன் ஆலோசனை நடத்தி, பண உதவியை ஒருங்கிணைத்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முயற்சிகளுக்கு உடனடியாக பதிலளித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக அதற்கு ஒத்துழைக்க முன்வந்தது. வாக்குறுதியளித்தபடி, அவர்கள் ஆசியக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்த நன்கொடையைக் கையளித்தனர்.