Print this page

வடக்குத் தமிழர் பிரச்சினைக்கு 2023 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன் தீர்வு - ஜனாதிபதி உறுதி

November 10, 2022

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி அடுத்த ஆண்டு 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் யாரும் தலையிட விரும்பவில்லை எனவும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்லும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கூடும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் அல்லது நாட்டின் சட்ட அமைப்பை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சகல சட்ட முறைமைகளையும் இந்த வருடமும் அடுத்த வருடமும் நவீனமயப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.