Print this page

தமிழகத்தில் உள்ள மலையக மக்களுக்கும் செந்தில் தொண்டமான் நேசக்கரம்

November 16, 2022

தமிழகத்தில் அநீதி இழைக்கப்பட்ட புலம்பெயர்ந்த மலையக தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர் நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும்,தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என அறிவித்தார்.