Print this page

ஆஸ்கர் போட்டியில் வெளியேற்றப்பட்டது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வெளியிட்டுள்ளனர். ஆஸ்கர் என அழைக்கப்படும் 93வது அகாடமி விருதுகள் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நாமினேஷன் பட்டியலிலாவது தேர்வாகுமா? என்கிற எதிர்பார்ப்பு இறுதி நேரத்தில் நிறைவேறாமல் போய் விட்டது.

சிறந்த திரைப்படம், சிறந்த நாயகன், சிறந்த நாயகி உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான ஆஸ்கர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒடிடி படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்கிற சிறப்பு விதியின் கீழ் ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறுவதற்கான உத்தேச பட்டியல் போட்டியில் தொடர்ந்து 7 நாட்கள் சூரரைப் போற்று திரையிடப்பட்டு, அங்குள்ள ஜூரிக்களால் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 366 படங்கள் இந்த இறுதியில் போட்டியில் கலந்து கொண்டன. அதில் இந்தியாவில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்றும் கலந்து கொண்டதே பெருமையாக பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் சூர்யாவின் சூரரைப் போற்று இடம்பெறவில்லை. இந்திய ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்று ஒரு பிரிவிலாவது வெற்றி பெறும் என எதிர்பார்த்த ரசிகர்கள் இதன்மூலம் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக கோல்டன் குளோப் விருதுகளிலும் போட்டியிட்ட சூரரைப் போற்று திரைப்படம் இறுதி நேரத்தில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.