Print this page

வீரரின் கதை - ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் விமர்சனம்

December 09, 2021

வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ஒரு வீரரின் கதை. சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அது, கேரளாவின் ஒரு சில பகுதிகளில், போர்ச்சுக்கீசியர்கள் காலூன்றிய காலம். தங்களை எதிர்ப்பவர்களை வெட்டி வீசியும், சுட்டுக்கொன்றும் அராஜகம் செய்து வருகிறார்கள். யாருக்கும் எந்தவித தீங்கும் செய்திராத மோகன்லாலின் தாயை ஒரு போர்ச்சுக்கீசிய படை தளபதி கழுத்தை அறுத்து கொலை செய்ததை சிறுவனாக இருக்கும் மோகன்லால் பார்த்து விடுகிறார்.

தாயை கொன்றவனை பழிவாங்கும் காலத்துக்காக மோகன்லால் காத்திருக்கிறார். அந்த காலம் கனிந்து நெருங்கி வருகிறது. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக, தலை சிறந்த வீரராக அவர் வளர்ந்து நிற்கிறார். இந்த சமயத்தில் கோழிக்கோடு சமஸ்தானத்தின் மன்னருக்கும், போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் முற்றி யுத்தத்துக்கு தயாராகிறார்கள்.

மன்னருக்கு மோகன்லாலின் உதவி தேவைப்படுகிறது. மோகன்லாலுக்கு கப்பல் படை தளபதி பதவியை கொடுக்கிறார். இது மன்னரின் சில சகாக்களுக்கு பிடிக்காமல் அவரை விட்டு பிரிகிறார்கள். பிரிந்து போனவர்கள் போர்ச்சுக்கீசியர்களுடன் கூட்டணி அமைத்து போருக்கு தயாராகிறார்கள். போரும் நடக்கிறது. அதில் வெற்றி யாருக்கு? என்பது இதய துடிப்பை எகிற வைக்கும் உச்சக்கட்ட காட்சி.

கதாபாத்திரமாகவே மாறும் ஒரு சில கதாநாயகர்களில் மோகன்லாலும் ஒருவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். இவரது கூட்டாளியாக வரும் பிரபுவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

அனந்தன் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன், சீன வீரரை காதலிப்பவராக கீர்த்தி சுரேஷ், மோகன்லாலின் தாயாக சுஹாசினி, மனைவியாக மஞ்சுவாரியர், மன்னராக நெடுமுடி வேணு மற்றும் சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன் என படம் முழுக்க நட்சத்திர கூட்டம்.

ரோனி ரபேல் இசையில், கர்நாடக சங்கீதம் கலந்த காதல் பாடல் மனதை வருடிக்கொடுக்கிறது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில், சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.

ஒரு வரலாற்று கதையை அதன் வீரியம் குறையாமல் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் பிரியதர்ஷன். படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

Last modified on Thursday, 09 December 2021 15:07