web log free
May 20, 2024

இதொகா தலைவர் மே தின மேடையில் ஆற்றிய கம்பீர உரை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற்ற இ.தொ.காவின் பிரமாண்ட மேதினக் கூட்டத்திலேயே இவ்வாறு கூறினார். 

இந்த மே தின நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்,

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். இ.தொ.கா.வின் மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் எமக்கு கற்பித்ததும் அதுதான். 

எதிர்காலத்திலும் இ.தொ.கா சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கின்றனர். உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுக்கொடுத்ததே காங்கிரஸ்தான் என அவர்களுக்கு கூறுகிறோம். 

கம்பனிகளுக்கு ஆதரவாக காங்கிரஸை ஊடங்களில் குறை சொல்கின்றனர். தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தாத கம்பனிகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தைகூட நடத்துவதில்லை இவர்கள். ஆனால், மக்களுக்காக போராடும் இ.தொ.காவுக்கு எதிராக இல்லாதக் கதைகளையும் கூறுகின்றனர். இது ஒரு நாகரீமாகிவிட்டது. 

அதற்கு இன்று இந்தக் கூட்டத்தின் ஊடாக பதில் அளிக்கிறோம். இ.தொ.காவால் மாத்திரம்தான் இலங்கையில் மூன்று நாட்களில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை கூட்ட முடியும். வெறும் மூன்று நாட்களில்தான் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஏனையவர்கள் மாதக்கணக்கில் நோட் புத்தகத்தை வைத்துக்கொண்டு கூட்டத்தை எங்கு செய்வதென திட்டம் வகுத்துக்கொண்டிருக்கின்றனர். 

இ.தொ.காவுக்கான கட்டமைப்பை எமது முன்னாள் தலைவர்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். 1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தருணத்தில் உரிமைகளற்ற சமுதாயமாக நாம் இந்த நாட்டில் இருந்தோம். 

இதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பலத்தின் ஊடாக போராடி இன்று இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு சமமாக படி படியாக உரிமைகள் பெற்ற சமூகமாக மலையக மக்களையும் மாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானாகும். அனைவரும் வரலாறுகளை மறந்துவிடுகின்றனர். 

தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவர் தந்தை செல்வா தமது கட்சி இரண்டாக பிளவுபட்ட போதும் மலையக மக்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்க அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் கைகோர்த்திருந்தார். எவ்வாறு அனைவரது தியாகங்களுடனும்தான் இன்று நாம் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பெற்ற சமூகமாக மாறியுள்ளோம். 

அதன் பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் சௌமியமூர்த்தி தொண்டமான், கடமைகளை கையளித்திருந்தார். அந்தப் பொறுப்புகளை முழுமையாக முடிக்க முன் அவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும், சௌமியமூர்த்தி தொண்டமான், வழியில் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்த தலைவராக ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார். குடியுரிமையை முழுமையாக எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது இவரது காலத்தில்தான். 

இன்று காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கலாம். காங்கிரஸ் என்ன செய்தது என நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உங்களது தாத்தா பாட்டியை கேள்வி கேட்பதற்கு சமமானது. உங்களது தந்தையை கேள்வி கேட்பதை போன்றது. இவர்கள் இணைந்து என்ன செய்தார்களோ அதனைதான் காங்கிரஸ் செய்தது. 

சம்பளத்தை காங்கிரஸ் வாங்கிக்கொடுக்காது என கூறினர். ஆனால், கடுமையான போராட்டத்தின் ஊடாக நாம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சரவையில் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கும் அரசாங்கத்துக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தார். 

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நாடாளுமன்றத்திலும் துறைசார் அமைச்சிலும் அழுத்தங்களை கொடுத்தார். பிரதி தலைவர்களான அனுசா சிவராஜாவும், கணபதி கணகராஜும் வாழ்வாதாரத்தை கணக்கிடுவதில் முன்னின்று செயல்பட்டனர். 

பிரதி தவிசாளர் மற்றும் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். பிரதி பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இந்தப் பணியை முன்னெடுத்தனர். இ.தொ.கா என்றால் மலையக மக்கள், மலையக மக்கள் என்றால், இ.தொ.கா.

நாங்கள் வரும் வழியில் இ.தொ.காவின் சுவரொட்டிகளை சிலர் கிழித்திருந்தனர். எமது சுவரொட்டிகளை பார்த்தால்கூட பயமாகவா இருக்கிறது. இதனை பார்த்தால் எமக்கு புதிதாக இருக்கிறது. 

இந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு பல தொழிற்சங்கங்களும் பல சமூக அமைப்புகளும் உதவி செய்தன. இத்தருணத்தில் அவர்களுக்கு இ.தொ.கா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் இ.தொ.கா முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்காது.

அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் அதற்கு அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் அதற்கு அடுத்த சம்பளப் பேச்சுவார்தையையும் இ.தொ.காதான் பேசும். என்றைக்கும் இ.தொ.கா மாத்திரம்தான் பேசும். ஏனையவர்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் மாத்திரமே பேசுவார்கள். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். குறுகிய காலத்தில் அதாவது கடந்த மூன்று மாதங்களாகதான் இந்த பேச்சுகள் இடம்பெற்றுவந்தன. ஆகவே, இந்த குறுகிய காலத்தில் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்கியமைக்கான அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தருணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் வகையில் முத்திரையொன்றை இ.தொ.கா முன்னிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிட்டமைக்காக இந்த விசேட நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அதேபோன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்த தருணத்தில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசியையும் 100 மெட்ரிக்தொன் மருந்துகளையும், 500 மெட்ரிக்தொன் பால்மாவையும் வழங்கி மக்களுக்கு உதவியளித்திருந்தார். எவர் உதவி செய்தாலும் அவருக்கு நன்றியை கூறுவது இ.தொ.காவின் மான்பு. 

“போற்றுவார் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும்“ என்ற அடிப்படையில் எத்தருணத்திலும் எமது இலக்கில் இருந்து விடுபட மாட்டோம். இ.தொ.காவின் தலைவர் என்ற அடிப்படையில் கட்சியையும் மக்களாகியு உங்களையும் காப்பாற்றும் பணியில் ஒரு அடியேனும் பின்வைக்க மாட்டேன்.” என்றார்.