web log free
May 05, 2024

இதுவும் ஒரு ஸ்டைல்..!

முதற்காதல் என்பது மூச்சடங்கும் வரை மறவாது என்று மற்றோர் சொன்ன போதெல்லாம் எள்ளி நகையாடியிருக்கிறேன், அம்மையின் வெம்மை வந்தாலே தெரியும் என்பது போல முதற்காதலில் முழுதாய் மூழ்கும் வரை. அவனைக் கண்ட நாள் சரிவரத் தெரியாத போதும் கண்ட இடம் இன்னமும் சரியாய் நினைவில் நிற்கிறது எனக்கு. அவை நிறைந்த ஒரு அரங்கிலே தோன்றிய அவன் அன்று என்னைப் பெரிதாய் வசீகரித்திருக்கவில்லை. 

அதன் பின்னர் அவன் பலமுறை என் வீடு வந்திருக்கிறான், என் அம்மாவுக்கு அவனை முன்பே தெரியுமென்றும் அவன் வல்லவன் நல்லவனென்றும், சிலாகித்துப் பேசிக் கொண்டேயிருப்பார். இப்படியாக என் வீட்டிலும் என் உறவினர் வீடுகளிலும் அரங்குகளிலும் அவனைப் பார்த்துப் பார்த்து அவன் மேல் பித்தானேன். அந்தக் காதல் கருவானது எந்த நொடி எந்தத் தருணமென்று ஏதுமே யான் அறியேன். ஆனால் ஏதோ ஒரு கணத்தில் இருந்தே அவனைக் காணும் போதெல்லாம் தண்ணிலவு என் மேல் பன்னீரைச் சொரிவது போலவும் பள்ளத்தாக்கு நிறைய ரோஜாக்கள் ஒரு சேர மலர்வது போலவும் மனம் மகிழ்ச்சியில் திண்டாடும். 

அவன் மேல் நான் கொண்ட உன்மத்தம் பற்றி அவனுக்கு இன்று வரை தெரியாது. இனியும் தெரிய வருமா என்பதும் எனக்குத் தெரியாது. காதலிக்க ஆரம்பித்த சில நாட்களில் எல்லாம் தெரிந்து கொண்டேன் அவன் வேறொருத்திக்கு வாக்கப்பட்டவனென்று. அதற்காக நான் அழுது அரற்றவோ புலம்பித் தேம்பவோ என் காதலைக் கைவிடவோ இல்லை. ஒரு தலைக் காதல் எத்தனை இரம்மியமானது? இதற்குப் பிரிவென்பதே கிடையாதே. நான் விரும்பும் வரை அவனைத் திகட்டத் திகட்ட காதல் செய்து கொண்டேயிருப்பேன் யார் என்னைக் கேள்வி கேட்க?

சில காலங்களில் எல்லாம் அவனைப் போலவே பலர் வந்தார்கள் சிலர் மனதில் நின்றார்கள் பலர் வந்த மாத்திரத்திலேயே மாயம் ஆனார்கள். அவர்களில் சிலர் மேல் மையல் கொண்டேனேயொழிய இவன் மேல் மட்டும் தான் காதலும் மோகமும் எனக்கு. 

அவனை நான் மருவக் காதல் கொண்ட போது அவன் மா பெரும் பணக்காரன். ஆனால் இவன் ஒன்றும் பிறவிப் பணக்காரன் இல்லை என்றும் he didn't born with a silver spoon but with a plastic spoon என்றும் பின்னர் உழைப்பால் ஊருலகு மெச்ச உயர்ந்தான் என்றும் சொன்னார்கள். இவன் தன் தற்போதைய தொழிலைத் தொடங்கிய போது அதற்கான எந்த அத்திவாரமுமோ தகுதியோ இவனிடம் இருக்கவில்லையாம். ஆனாலும் அவனது ஸ்டைலில் அவன் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டானாம்.எந்தத் தொழிலிலும் அதன் வரையறைகளை மீறியும் ஒருவனால் ஜெயிக்க முடியமெனக் காட்டியவன் என் கறுப்பழகன். இவனது தொழில் போட்டியாளர்கள் போல வித விதமான சரக்குகளை இவன் விற்றதில்லை. ஒரே சரக்குக்கு சில மாறுதல்களை அவ்வப்போது செய்வான். இருந்தும் இவனை வீழ்த்த எவராலும் இன்று வரை இயலவில்லை இனியும் நிச்சயமாய் எவராலும் இயலாது. இவையெல்லாம் இவனால் எப்படி சாத்தியமானது? என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவனது வேர்வையே இவனது வெற்றிக்கு வேர் வைத்திருக்கிறது. தனக்கென இவன் உருவாக்கிய ஸ்டைலே இவன் மார்கெட் வலியுவுக்குக் காரணம் என்றால் அது அன்னையவள் அன்பு அழுக்கற்றது என்பது போன்றது. இப்படியாக இவனைப் பற்றி அறியவும் தெரியவும் என் மனம் அவனிடத்தே கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல கலக்கிறது. 

எனக்கு அவன் 

மூன்றெழுத்து உற்சாகம் !!!

மூன்றெழுத்து உழைப்பு !!!

மூன்றெழுத்து முயற்சி !!!

மூன்றெழுத்தேயான ஸ்டைல் !!!

#Happy_Bday_thalaiva

#RAJINI

#மீள்

Post by : Ealilmolle Rajagulendra

 

Last modified on Sunday, 12 December 2021 15:52