web log free
May 03, 2024

ரஜினி - விஜய் இடையே மோதல்! காரணம் என்ன தெரியுமா?

 

தேர்தலை சந்திக்கும் முதன் முறையிலேயே சூப்பர் ஸ்டாரோடு போட்டி போடுகிறார் விஜய். ரஜினிகாந்த் ரிஜிஸ்டர் செய்து வைத்த சின்னங்களை விஜய் கேட்டும் மறுப்பு தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்... கிராமப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மறைமுகமாக போட்டியிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்குமாறு உத்தரவிட்டுள்ளார் நடிகர் விஜய்.

எம்.ஜி.ஆர்.-சிவாஜிக்கு பிறகு அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் ரஜினி-கமல் தான். இதில் கமல் அரசியலில் வருவேன் என கூறிய அடுத்தடுத்த நடவடிக்கைகளை விரைவாக எடுத்தார். கட்சிக்கு பெயர் வைத்து, கொடியை அறிமுகப்படுத்தி சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கி நூலிலையில் தோல்வியடைந்தார். ஆனால் ரஜினியோ பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன், வருவேன் எனக் கூறி இறுதியில் அரசியலில் இறங்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி ரசிகர்களை ஏமாற்றினார்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது விஜய்-அஜித்தைத் தான். இதில் அஜித் திட்டவட்டமாக நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என கூறிய நிலையில், விஜய்யோ எதுவும் பேசாமல் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

ஒரு ஒரு வருடமும் தனது படம் ரிலீசாகும் முன்பு நடைபெறும் இசை வெளியீட்டு விழாவின் போது, அப்போது நடைபெறும் அரசியல் நகர்வுகளை சூசகமாக கலாய்த்து தள்ளுவார் விஜய். அதனாலேயே அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பல அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். ஆனால் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை ஆரம்பித்த போது அதனை எதிர்த்து முதல் ஆளாக குரல் கொடுத்தவரும் விஜய் தான்.

அப்படியென்றால் அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற சந்தேகமும் அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்களில் 129 பேர் வெற்றியும் பெற்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவதாக கூறப்படவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய்.

இப்படியிருக்க தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 12,838 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறும், 1,298 பதவிகளுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வர். தேர்தலில் விஜய் படம், இயக்கக் கொடியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.