web log free
May 03, 2024

பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு முக்கிய உலகத் தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்திகள் வருமாறு

 

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலமானார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான், “லதா மங்கேஷ்கரின் மறைவால் துணை கண்டம் உலகம் அறிந்த சிறந்த பாடகர்களில் ஒருவரை இழந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பலருக்கும் இவரது பாடல்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அதேபோல் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, “இசை என்பது உலகளாவிய மொழி என்ற வாக்கியத்திற்கு உயிர் கொடுத்து மக்களை பல ஆண்டுகள் எல்லை கடந்து மகிழ்வித்ததற்காக லதா மங்கேஷ்கருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களுக்கும், லதா மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, “லதா மங்கேஷ்கர் இசைக்கு அளித்த பங்களிப்பின் மூலம் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் மனதில் எப்போதும் வாழ்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.