நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். கலெக்டராக வந்த அறம், போதை போருள் விற்பவராக வந்த கோலமாவு கோகிலா படங்கள் வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மாயா என்ற திகில் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பேயாக வந்தும் மிரட்டினார். இப்போது ஐரா என்ற இன்னொரு திகில் படத்திலும் நடித்து இருக்கிறார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், “மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா” என்றதும் “என்னது மறுபடியுமா” என்று ஒரு பெண் பதறுவதுபோல் பேசுகிறார்.
“என் தலையெழுத்த யாருன்னே தெரியாத ஆறுபேர் கிறுக்கி எழுதி இருக்காங்க” “உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல” என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. பெண்சிசு கொலையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. ஒரு நயன்தாராவுக்காக இன்னொரு நயன்தாரா பழிவாங்குவது கதை என்று தெரிகிறது.
நயன்தாரா மேக்கப் போடாமல் கருத்த முகத்தோடு இதில் வருகிறார். அவரது விழிகளில் கண்ணீர் நிரம்பி இருக்கிறது. இன்னொரு நயன்தாரா மாடர்ன் உடையில் காட்சியளிக்கிறார். கருப்பு நயன்தாரா பேய் வேடமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.