சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றில், சன்னி லியோன் தவறுதலாக கூறிய தொலைபேசி எண்ணால், 26 வயதான புனீத் அகர்வால் பெரும் விரக்தியில் உள்ளார். காரணம், பலரும் சன்னி லியோனின் உண்மையான எண் என்று நினைத்து புனீத்துக்கு தொடர்பு அழைப்புகளால் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
’அர்ஜூன் பாட்டியாலா’ என்ற திரைப்படத்தில், சன்னி லியோன் புனீத்தின் தொலைபேசி எண்ணை திரைப்படத்தில் சொல்வதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஜூலை 26ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு பின்னர் தினமும் 100 தொலைபேசி அழைப்புகளுக்கு மேலாக தான் பெற்று வருவதாக அகர்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
தனக்கு தொடர்ந்து வழங்கப்படும் இந்த தொல்லையால் மிகவும் சோர்ந்து, விரக்தி அடைந்துள்ளதாகவும் அகர்வால் தெரிவித்தார்.
"இதற்கு மேல் என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. அதிகாலை நான்கு மணிவரை தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன" என்று விரக்தியோடு அவர் கூறினார்.
சட்ட நடவடிக்கை மூலம் இந்த திரைப்படத்தில் இருந்து தனது எண்ணை நீக்க செய்ய நினைக்கும் அளவுக்கு, இந்த தொலைபேசி அழைப்புகளின் தொல்லை அவரை இட்டு சென்றுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஆபாசப்பட நடிகை சன்னி லியோன், இப்போது இந்தியாவில் பாலிவுட்டில் நடிக்கிறார். கவர்ச்சி திரில்கள் மற்றும் வயதுவந்தோருக்கான நகைச்சுவை படங்களில் நடித்துள்ள இவர், கவர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
எனவே, பாலிவுட் திரைப்படத்தில் சன்னி லியோன் சொல்லுகின்ற தொலைபேசி எண்ணை, அவருடைய சொந்த எண் என நினைத்து, இந்தியாவிலுள்ளவர்கள், ஏன் உலக நாடுகளில் உள்ளவர்கள்கூட இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.
”இந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு தொலைபேசி எண்ணை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு முன்னால், இந்த எண்ணை அழைத்து சோதித்து பார்த்திருக்க வேண்டும்," என்று கோபப்படுகிறார் அகர்வால்.