தன்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தியதால்தான் நம்பிக்கை உடையவளாக மாறினேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.
தமிழில், ஆர்.கே.ஹீரோவாக நடித்த எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தவர் மதுரிமா துளி. தெலுங்கில் ஹோமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், பிறகு இந்தி சினிமாவுக்கு சென்றார்.
அங்கு டாஸ், பேபி, நாம் ஷபானா உட்பட சில படங்களில் நடித்த மதுரிமா, இப்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் நடிகை மதுரிமா, தான் பள்ளியில் படிக்கும்போது சக மாணவிகளிடம் அதிக கொடுமைகளைச் சந்தித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் ஒடிஷாவைச் சேர்ந்தவள். அங்கிருந்து டேராடூன் சென்றேன். அங்கு பள்ளியில் சேர்ந்தேன். எனது ஆங்கில அறிவையும், உடையையும் வைத்து சக மாணவிகள் அதிகமாகத் துன்புறுத்தினார்கள்.
எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கும். அப்போது அழகாக டிரெஸ் அணிவது பற்றியோ, உடைகள் மீது கவனமோ இருக்காது. சாதாரணமாகத்தான் செல்வேன்.
எனது ஆங்கிலமும் உச்சரிப்பும் அவ்வளவு நன்றாக இருக்காது. அந்த கொடுமைகளை சகித்துக்கொண்டேன். ஆனால், மிஸ் உத்ராஞ்சல் அழகிப் போட்டியில் நான் வென்ற பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.
என்னை கிண்டலடித்தவர்கள் அனைவரும் எனக்குத் தோழிகளாகி விட்டனர். அவர்கள் எனக்குத் தொல்லைக் கொடுத்தது ஒருவகையில் நல்லதுதான் என்று நினைக்கிறேன்.
அந்த கிண்டலும் கேலியும்தான் எனக்கு நம்பிக்கையை அளித்தது. நன்றாக கற்க வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. நம்பிக்கைக்குரியவளாக என்னை மாற்றியது’ என்று கூறியுள்ளார்.