திரைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்த ரஜினிக்காந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதான 51 ஆவது தாதாசாகெப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெறுவார் என்று இந்திய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த மதிப்புமிக்க விருது இந்திய சினிமாவின் தந்தை துந்திராஜ் கோவிந்த் பால்கே என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது.
இது 1969 இல் நிறுவப்பட்டது. இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
இதேவேளையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் நடிகர் ரஜினிக்காந்துக்கு விருது அறிவித்துள்ளதிற்கும் தொடர்பில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிக்காந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் ரஜினிக்காந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.