web log free
November 21, 2024

ஜெய்பீம்

November 06, 2021

"எப்பொழுதும் போராடிக் கொண்டே இருப்பதால் என்ன கிடைத்துவிடப் போகிறது?" என்று சிலர் கேட்பார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் போராட்டதினால் மட்டுமே  அடிப்படை உரிமைகள் கூடக் கிடைக்கின்றன.

அப்படிப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும், சிறை மரணத்திற்கு (lockup death) எதிரான அவர்களின் வழக்குப் போராட்டத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிற திரைப்படம் #ஜெய்பீம்.

அமேசான் ப்ரைம் இல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இருளர், குறவர் போன்ற பழங்குடி மக்கள், ஓட்டு அட்டை, ரேஷன் அட்டை கூட கிடைக்காமல் அல்லாடுவதும், காவல் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்களுக்கு நேரிடும் மனித உரிமை மீறல்களும் நாம் எளிதில் கடந்து செல்ல முடியாத அளவிற்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இன்று நமக்கு இருக்கும் இணைய வசதி அலைபேசியினால் செய்திகளை உடன் தெரிந்து கொள்கிறோம். ஆனால் 1990 களில் அந்த வசதிகள் இல்லாததால்,  மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை பற்றி எழுதும் அளவுக்கு முக்கியம் இல்லை என பத்திரிகைகளும் நினைத்தன.

குறிப்பாக வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட காவல்துறை தனிப்படை வாசாத்தி எனும் கிராமத்தில் நிகழ்த்திய வன்கொடுமைகளும், IPKF ஈழத்தில் நிகழ்த்திய வன்கொடுமைகளும் பல மாதங்கள் கழித்தே வெளிஉலகிற்குத் தெரிந்தன.

தான் வாதித்த வழக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத நீதியரசர் சந்துரு முதல் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த சிறு அரசியல் இயக்கங்கள் வரை ஜெய் பீம் திரைப்படத்தில் சரியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல் இன்றும் செய்யாதக் குற்றத்திற்காக, ஜாமீன் எடுக்கவும் ஆளில்லாமல், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் பழங்குடியினர் பல்லாயிரம் பேர். மூன்றில் ஒரு சிறைவாசி இச்சமூகத்தை சேர்ந்தவர்.

இவர்களின் துயரம் முதல்  கடந்த ஆண்டு நடந்த ஜெயராஜ் - பெனிக்ஸ் சிறை மரணம் வரை அனைத்தும் திரையில் காட்சிப்படுத்தப்பட்டால் அதிகார வர்க்கம் நிகழ்த்தும் அராஜகம்  மக்களால் உறுதியாக எதிர்க்கப்படும். "காக்க காக்க" போன்ற இயக்குநர் கௌதம் மேனனின் திரைப்படங்களால் வளர்க்கப்படும் அதிகாரங்களின் அராஜகங்களை சமூக அக்கறையுடன் உள்ள இத்திரைப்படங்களின் மூலமே குறைத்திட முடியும்..

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd