web log free
March 28, 2024

இலங்கை கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டுவருவதற்கான காரணம் என்ன? அர்ஜுன ரணதுங்க விளக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் நிர்வாகத்தின் ஊழல்வாதிகள் உள்ளதால் கிரிக்கெட் அணி பாரிய வீழ்ச்சியை கண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கல்குடா பாசிக்குடாவில் உள்ள விடுதியொன்றில் நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கிரிக்கெட் அணியில் நான் தலைமைத்துவம் வகித்த சமயத்தில் நிருவாகத்தில் சிறந்தவர்கள் இருந்தார்கள். இதன் மூலம் எங்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து உலக கிண்ணத்தை கைப்பற்றினோம். ஆனால், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்வாதிகள் அதிகம் உள்ளதால் இலங்கை கிரிக்கெட் அணி பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது.

எனவே, இதில் விளையாட்டு அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி கிரிக்கெட்டை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நான் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளேன். தனக்கு அரசியலில் மீண்டும் பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அரசியலில் மீண்டும் நிச்சயம் பயணிப்பேன்.

நாட்டில் அடிக்கடி மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சீர் செய்யும் வகையில் எனது நிறுவனமான டெக்கோ டெக்னோலோஜி சோளார் கம்பனியை ஆரம்பித்து சோளார் இணைப்பை வழங்கி வருகின்றேன்.

உலகத்தில் உள்ள முதல்தர சோளார் நிறுவனத்திடம் சோளார் பெற்று இலங்கை மின்சார சபையினரின் அனுமதியுடன் சோளார் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் சோளார் விற்பனை நிலையங்களை திறந்து வைத்துள்ளேன்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் சோளார் இணைப்பை ஏற்படுத்தி தங்களுக்கான மின்சார பாவனையை பெற்றுக்கொள்வதுடன், மின்சார சபைக்கு மின்சாரத்தினை வழங்கி இலாபங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.