இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை தனது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாட்டில் சுமார் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும், அதில் சுமார் 2 பில்லியன் டொலர் பயன்படுத்த முடியாத நிதி எனவும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்கான அவசர உத்தியை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி எதிர்காலத்தில் நாடு எதிர்கொள்ளவுள்ள பாரிய சவால் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான 14 பில்லியன் டொலர் நிதி தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது நாட்டிடம் சுமார் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும், அதில் சுமார் 2 பில்லியன் டொலர் பயன்படுத்த முடியாத நிதி எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்கான முறையான உத்தியை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறினால், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் கம்மன்பில கூறினார்.
இது தொடர்பாக பல ஊடகவியலாளர் சந்திப்புகளில் புள்ளிவிவரங்களுடன் தாம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, கலாநிதி என். எம். பெரேரா ஒருமுறை கூறியதாகக் குறிப்பிடப்படும், “எங்களால் விடயங்களைச் சொல்லிக் கொடுக்க முடியும்; ஆனால் அவற்றைப் புரிந்துகொள்வதற்கான மூளையை வழங்க முடியாது” என்ற கருத்தையும் கம்மன்பில நினைவுகூர்ந்தார்.
இந்த சவாலை அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடியாது என தாம் கருதுகிறாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த கம்மன்பில, “தொப்பியைத் தைத்து வீசும்போது அது யாருடைய தலைக்கு பொருந்துகிறதோ, அவர் அதை அணிந்துகொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை” எனக் குறிப்பிட்டார்.




