web log free
September 30, 2023

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கிளைவ் பொன்சேகா நியமிப்பு

முன்னணி வங்கியாளர் கிளைவ் பொன்சேகா மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 1, 2023 முதல் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.

பொன்சேகாவின் விரிவான அனுபவம் மற்றும் நிதித்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் அவரை மக்கள் வங்கியை அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்கித்துறையில் பெரும் அனுபவமிக்க கிளைவ் பொன்சேகா, இலங்கை வங்கியாளர்கள் கற்கை நிலையத்தின் அங்கத்தவராவார், மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மேற்பட்டப்படிப்பு கற்கை நிலையத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

2018 முதல் 2020 வரை முதனிலை வணிகர்கள் சங்கத்தின் தலைவராக பொன்சேகா கடமையாற்றிய காலத்தில், சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதோடு, நிதித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை முன்னெடுத்தார்.

தேசிய கொடுப்பனவுகள் ஆணைக்குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு உட்பட பல குழுக்களில் அவரது தீவிர ஈடுபாடு, நிதி சுற்றுச்சூழல் அமைப்பின் முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

அவர் தற்போது பீப்பள்ஸ் லீசிங்ரூபைனான்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் லீசிங் புராப்பர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட் மற்றும் டுயமெயீயல (பிரைவேட்) லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பணியாற்றுகிறார்.

2002 இல் மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்னர் அவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்துள்ளார்.

நவம்பர் 2011 முதல் மக்கள் வங்கியில் பிரதிப் பொதுமுகாமையாளராகப் பணியாற்றிய அவர், அந்நிய செலாவணி நடவடிக்கைகள், முதனிலை வணிகர்கள் பிரிவு நடவடிக்கைகள், முதலீட்டு வங்கிப் பிரிவு மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர், இலங்கை ரூபாய் பணச்சந்தை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.