web log free
December 26, 2024

மக்கள் வங்கி வழங்கும் புத்தாண்டுக் கொடுக்கல் வாங்கல் பரிசுகள் 

 

தமிழ் சிங்கள புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு புதியதொரு அர்த்தத்தை சேர்ப்பிக்கும் வகையில், மக்கள் வங்கி காலம் காலமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வந்துள்ளதுடன், இம்முறையும் புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) திரு. ரீ.எம்.டபிள்யூ சந்திரகுமார அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையில் சாமானிய மக்களுக்கும் வங்கிச்சேவை வசதிகள் கிடைக்கப்பெறச் செய்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டம மக்கள் வங்கி, ஆரம்பத்திலிருந்தே மக்களுடைய சிந்தனைகளையும், விழுமியங்களையும் மதித்து செயல்பட்டு வந்துள்ளது. இலங்கையில் பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள மக்கள் வங்கி, இலங்கையில் வங்கித்துறையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை 1973 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி, இதனை முதலில் அறிமுகப்படுத்திய வங்கியாக சாதனை படைத்தது.

அன்றுதொட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் மக்கள் வங்கி இந்த புத்தாண்டு சம்பிரதாயத்தை தவறாது முன்னெடுத்து வந்துள்ளது. புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்காக வங்கிக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியான பல்வேறு பரிசுகளை அது தற்காலத்தில் வழங்கி வருகின்றது. வங்கிச்சேவையை ஊக்குவித்து, மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தைத் தோற்றுவித்து, தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பதில் முன்னின்று செயல்படுவதே வங்கியின் பிரதான நோக்கமாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“இந்த ஆண்டும், புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பினை மக்கள் வங்கி உங்களுக்கு வழங்குகின்றது. அதற்கமைவாக, மக்கள் வங்கிக் கிளைகள் அனைத்தும் ஏப்ரல் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு திறக்கப்படுவதுடன், மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்களும், மக்கள் வங்கியின் பணியாளர்களும் தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாட இடமளிக்கும். ரூபா 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்பில் இடுகின்ற வாடிக்கையாளர்கள் மதிப்புமிக்க பித்தளை விளக்கொன்றை பரிசாகப் பெற்றுக்கொள்வர்.

இதை விட, ஒவ்வொரு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைக்கும் நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளதுடன், வருகை தருகின்ற வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடையாளமாக பாற்சோறு மற்றும் பலகாரங்களும் பரிமாறப்படும். ஆகவே வழக்கம் போலவே புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 15 ஆம் திகதி மக்கள் வங்கிக் கிளைகளுக்கு வருகை தருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd