web log free
July 27, 2024

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை இணைந்து ‘பௌத்த நலன்புரி நிதியம்’ ஆரம்பிப்பு

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து ‘பௌத்த நலன்புரி நிதியம்’என்ற கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. 

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து சமூக அக்கறையை வளர்க்கும் நோக்குடன் ‘பௌத்த நலன்புரி நிதியம்’ என்ற கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள மக்கள் வங்கி தலைமை காரியாலயத்தில் அண்மையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றதுடன், தியவனத நிலமே திரு. பிரதீப் நிலங்க தெல, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

இத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதைக் குறிக்கும் வகையில் ‘பௌத்த நலன்புரி நிதியத்திற்கு’ நன்கொடையொன்றை மக்கள் வங்கி அளித்துள்ளதுடன், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களையும் வழங்கியுள்ளது. 

மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன ஒன்றிணைந்து, 1995 ஆம் ஆண்டில் முதன்முதலாக பௌத்த நலன்புரி நிதியத்தை ஸ்தாபித்திருந்ததுடன், இன, மத பேதமின்றி, எதிர்காலத்தின் சிற்பிகளான சிறுவர்களின் எதிர்கால நலனுக்கு இது மாபெரும் உரமாக அமைந்தது. இத்திட்டத்தினூடாக பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை சிறப்பாக்கியுள்ளனர்.  

இப்புதிய திட்டமானது 2024 ஜுன் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தற்போது வழங்கப்படுகின்ற நன்மைகளை அதிகரித்து, குறைந்த வருமானத்தை ஈட்டுகின்ற குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கும் பயனளிக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது.

அதற்கமையாக, தரம் 6 முதல் 11 வரை கல்வி கற்கின்ற 2,000 மாணவர்களுக்கு இத்திட்டத்தினூடாக மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், நாடெங்கிலுமுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மத்தியில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதே இதன் நோக்கம். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் மக்கள் வங்கியும் அதன் ஊழியர்களும் இந்நிதியத்திற்கு பங்களிக்கவுள்ளனர்.

தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “உலகெங்கிலும் பௌத்தர்களின் புனித தலமாகத் திகழ்ந்து வருகின்ற ஸ்ரீ தலதா மாளிகையில் சமய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமைக்குப் புறம்பாக, இன, மத பேதமின்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் நலன் சார்ந்த சமூகச் செயற்பாடுகளும் ‘எமது அக்கறை’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நோக்கத்துடன் பல்வேறு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஸ்ரீ தலதா மாளிகையுடன் மக்கள் வங்கி எப்போதும் கைகோர்த்து வந்துள்ளது. இந்த வகையில், இத்தேசத்தின் புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் நலனுக்கான 1995 ஆம் ஆண்டில் பௌத்த நலன்புரி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.

ஸ்ரீ தலதா மாளிகையால் இந்த புலமைப்பரிசில் நிதியத்திற்கு இது வரை ரூபா 500 மில்லியன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கும் இப்புதிய திட்டத்துடன், ‘பௌத்த நலன்புரி நிதியம்’ இன்னும் வலுவானதாக மாறும். அறிவும், ஆற்றலும் நிறைந்த சிறுவர்களைக் கொண்ட தலைமுறையே இத்தேசத்தின் எதிர்காலத்தின் உரமாகத் திகழ்வுள்ளது. இந்த உன்னதமான முயற்சி உலகினை வெற்றி காண்பதற்கு அவர்களுக்கு உதவும்,” என்று குறிப்பிட்டார். 

மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “தேசத்தின் எதிர்கால தலைமுறைகளாகத் திகழும் சிறுவர்களுக்கு வாழ்வளிக்கின்ற வகையில், காலத்தின் தேவையாக அமைகின்ற ஒரு முயற்சியாகவே மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் இந்த பௌத்த நலன்புரி நிதிய கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தை நான் காண்கின்றேன்.

பல தசாப்தங்களாக, தேசத்தின் தங்கக்கிரீடத்தின் தாயகமான ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ வங்கியாளராக மக்கள் வங்கி திகழ்ந்து வருவதுடன், மிகவும் கௌரவமான உறவுமுறையையும் சிறப்பாகப் பேணி வந்துள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறுகின்ற வருடாந்த எசல பெரஹரா உற்சவத்திற்கு பல தசாப்தங்களாக மக்கள் வங்கி அனுசரணையளித்து வந்துள்ளது. இப்புதிய திட்டத்தினூடாக எமக்கு இடையிலான பிணைப்பு மேலும் ஆணித்தரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “அறுபத்தி இரண்டு ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு வங்கி மற்றும் நிதிச் சேவைகளை மக்கள் வங்கி தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளது. இலாபத்திற்கு முன்னுரிமையளிக்காது, நாட்டின் பொது மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள வங்கி என்ற அர்ப்பணிப்புடன் இது தொடர்ந்தும் பயணித்து வருகின்றது.

மக்கள் வங்கியின் சமூக நலன்புரித் திட்டங்கள் அனைத்தும் தற்சமயம் ‘மகாஜன மெஹெவர’ என்ற நாமத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் ஒரு அங்கமாகவே, நாட்டிலுள்ள குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வித் தேவைகளுக்கு உதவுவதற்காக ஸ்ரீ தலதா மாளிகையுடன் இணைந்து பௌத்த நலன்புரி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமூக நலன்புரிச் செயற்திட்டங்களுக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து பங்களிப்பதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.

 

மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி நாலக விஜயவர்த்தன, பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) திரு. ரீ.எம்.டபிள்யூ சந்திரகுமார" பிரதிப் பொது முகாமையாளர் (கிளை முகாமைத்துவம்) நளின் பத்திரணகே, பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) மஞ்சுள திசாநாயக்க, ஸ்ரீ தலதா மாளிகையின் ஊடகம் மற்றும் விசேட செயற்திட்டங்களுக்கான பணிப்பாளர் கிறிஷாந்த கிஸ்ஸல்ல, மக்கள் வங்கி மற்றும் ஸ்ரீ தலதா மாளிக்கையின் ஏனைய அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில்

சமூகமளித்திருந்தனர்.