web log free
November 23, 2024

ஐஃபோன் 11 சிறப்பம்சங்கள்

முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐஃபோன் 11 மாடல்களில் அதிக கேமிராக்கள் இருக்கின்றன. மேலும், அதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு குறைவான ஆற்றலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரிஸ் 5 என்ற கைகளில் அணியக்கூடிய நவீன கடிகாரமும், 10.2 இன்ச் அளவுகொண்ட ஐபேடும், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆமேசானுக்கு போட்டியாக வெறும் மாதம் 4.99 டாலருக்கு ஆப்பிள் டிவி பிளஸ் திட்டத்தையும் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் அறிமுகப்படுத்தினார்கள்.

ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது.

 

6.1இன்ச் லிக்விட் ரெட்டினா திரையை கொண்டுள்ள ஆப்பிளின் புதிய ஐஃபோன் 11ல் ஏ13 பையோனிக் சிப் இடம்பெற்றுள்ளது. தற்போது சந்தையில் விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களிலே அதிவேக  மைய செயலகமும், அதிவேக கிராபிக்ஸ் செயலகமும் கொண்டது.

ஐஃபோன் 11னின் கேமிராவில் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதாவது, ஐஃபோன் 11ல் இரண்டு கேமிராக்களும், ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸில் மூன்று 12MP கேமிராக்களை கொண்டுள்ளது. ஒன்றில், வைட் ஆங்கிள் லென்ஸும், மற்றொன்றில் 120 டிகிரியை முழுமையாக திரைக்குள் கொண்டுவரும் வகையில் மிக அதிக வைட் ஆங்கிள் லென்ஸையும் கொண்டுள்ளது. மூன்றாவது டெலிபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது.

இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் துல்லியமாக எடுக்க உதவும் ஸ்மார்ட் எச்டிஆர் தொழில்நுட்பம் ஐஃபோன் 11ல் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கேமிராக்கள் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்கின்றன.

 

 செல்ஃபி கேமிராவும் 12MP திறன் படைத்தது. செல்ஃபி கேமிராவும் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும். மேலும், ஸ்லோ மோஷன் காணொளிகளை பதிவு செய்யவும் முடியும்.

ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் ஐஃபோன் எக்ஸ் ஆரைவிட ஐஃபோன் 11 ஒருமணி நேரம் கூடுதலாக இயங்கும் திறன் படைத்தது.

ஆப்பிள் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கென புதிய வீடியோ கேம்களும் , ஆமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்று ஆப்பிள் டிவி பிளஸ் என்ற பிரத்யேக சேவையையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒரு குடும்பத்துக்கு மாதம் 4.99 டாலர் என்ற கட்டணத்தில் இந்த சேவை கிடைக்கும்.

புதிய ஆப்பிள் தயாரிப்பு ஒன்றை வாங்கும்போது, ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ஓராண்டு சேவையை இலவசமாக பெறலாம். நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாடுகளில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை தொடங்கப்பட உள்ளது

 

 

Last modified on Tuesday, 17 September 2019 15:16
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd