web log free
November 23, 2024

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற வானிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சீரற்ற வானிலையால் 5 பேர் காயமடைந்துள்ளார்கள். 18 சொத்துக்களுக்கு முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு 960 சொத்துக்கள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற வானிலையால் 23 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புத்தளம், முந்தல், மதுரங்குளி பிரதேசங்களில் உள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துரிதமாக நீர் நிரம்பி வருவதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

கொழும்பு, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தட்டுவ புதிய நகரில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்றின் அறை முற்றாகச் சேதமடைந்துள்ளது. புத்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 42 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை, அறநாயக்க, அப்பெல்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இறம்புக்கனை, மாவனல்லை வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம், கொழும்பு வீதியின் பாலாவி பிரதேசத்திலும், குருநாகல் புத்தளம் வீதியின் அரலியஉயன இரண்டாம் கட்டைக்குஅருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வெளிநாட்டவர்களைச் சேர்ந்த பஸ் வண்டி ஒன்று பாலாவி பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது.

நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் பிளக்புல் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து தற்சமயம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மஹஓயா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படகோட்டச் சென்றமையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கேகாலை, இறம்புக்கணை, புவக்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டமையால் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

கம்பஹா, பியகம, யட்டவத்த கிராம செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டத்தின் குடாகங்கை, புளத்சிங்கல, தொடங்கொட உட்பட களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தாழ் நிலப்பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

கேகாலை, கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் களனிகங்கையை அண்டிய தெஹியோவிட்ட சீதாவக்க, தோம்பெ, பியகம, கொலன்னாவை, கொழும்பு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களிலும் வெள்ளம் ஏற்படலாம்.

கம்பஹா, குருநாகல் மாவட்டங்களின் மஹஓயாவை அண்டிய கிரியுல்ல, அளவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் வழங்கும் எச்சரிக்கை அறிவித்தல்கள் பற்றி என்றும் கரிசனையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியானது போக்குவரத்து செய்யமுடியாத வகையில் வீதி நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்தும் 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் வடக்கில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கத்தினால் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் மக்கள் குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் - ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டதாக கூறப்படும் போதை மாத்திரைகளை யாழ்.பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு சொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அடையாளம் காணப்பட்ட இரு கார்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதிலிருந்து போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்.நகரை சேர்ந்த ஒருவரையும், கொழும்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Gallery

Gallery

Gallery 

Page 2 of 7
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd