web log free
May 19, 2025
kumar

kumar

வசந்த முதலிகே இராஜினாமா செய்துள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் புதிய அழைப்பாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் பேரவை அமர்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இந்த புதிய நியமனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ, ருஹுணு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இத்தேர்தலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் கடந்த காலங்களில் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகளுடன் உடன்படாத காரணத்தினால் பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர்களில் ஒருவரான ஜனித் ஜனஜய அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் ரிபாத் குருவி (பைரா) ஆகியோர் புதிய அழைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக இன்று (17) நியமனம் பெற்றுள்ள செந்தில் தொண்டமானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு இருவரும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சி பிரதிநிதிகள் சகிதம் விரைவில் ஆளுநருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
 
அந்தவகையில், வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
 
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராவார். அவர் ஊவா மாகாண சபையில் அமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் செயற்பட்ட அனுபவம் கொண்டவர்.
 

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று (16) இடம்பெற்றதோடு இதில் பின்வரும் விசேட யோசனைகள் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியை கட்டியெழுப்ப தாம் செயற்படுவதாகவும்,இதற்குத் தேவையான உள்ளக மற்றும் வெளியக ரீதியான பொறுப்புகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்குழுவில் தெரிவித்தார்.

குறித்த கூட்டணியை கட்டியெழுப்பும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் தரப்புகளுடன் உரிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒழுக்காற்றை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் பணிக்கப்பட்டனர்.

*விசேட பிரேரணைகள்!

இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் கலந்து கொண்டதோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நம்பகமான தலைவர் வேறு எவரும் இல்லை எனவும்,நம்பகமான தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.

*இதன் பிரகாரம்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவே போட்டியிட வேண்டும் என சுஜீவ சேனசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் முன்மொழிந்ததோடு, இதற்கு செயற்குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.

சமிந்த விஜேசிறி,எஸ்.எம்.மரிக்கார், ரெஹான் ஜயவிக்ரம,ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உள்ளிட்டவர்கள் கருத்துத் தெரிவித்து இந்த பிரேரணைக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 412 டெங்கு நோயாளர்கள் 15ம் திகதி பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் அவரை சதி செய்து, கொலை செய்ய குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிவலிங்கம் ஆரூரன் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அமைய, பிரதான சாட்சியாக மன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இது வலுக்கட்டாயமாக பெறப்பட்ட வாக்குமூலம் என விசாரணைகளின் போது எதிர்த்தரப்பினரால் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்த சாட்சியும் இல்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரொஹான் அபேசூரிய நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து, குறித்த நபர் 15 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா மன்றில் ஆஜராகியிருந்தார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான லைக்கா நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தியாகராய நகர் உள்ள விஜயராகவா சாலையில் உள்ள லைக்கா நிறுவன அலுவலகம், அடையாறில் உள்ள சுபாஷ்கரனின் இல்லம், சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை விஜயராகவா சாலையில் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெளிநாடுகளில் பெரிய அளவில் இந்நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாகவும், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான கணக்குகள் தொடர்பாகவும் (இதை சரியாக அந்நிறுவனம் காட்டவில்லை என புகார் உள்ளது). சோதனை நடைபெறுவதாக தெரிய வருகிறது.

சோதனை முடிவில் நிறுவனம் எந்த அளவுக்கு சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வரும் என கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட உள்ளார்.

நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற உள்ள அரச நிகழ்வில் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற உள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக தற்போது செயல்படும் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தின் பதில் முதலமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

பல வருடங்கள் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட செந்தில் தொண்டமானின் சிறந்த தலைமை நிர்வாக திறமை மிக்கவராவார்.

இவரது நிர்வாக திறமையின் பலனாக இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஒருவராக முதல் முறை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியில் செந்தில் தொண்டமான் அமர உள்ளமை விசேட அம்சமாகும்.  

ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைக்கும் வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருக்க முடியும் எனவும் அதனை எவரும் சவால் செய்ய முடியாது எனவும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி நோட்டீஸ் கொடுத்தால், அவர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அந்த அறிவிப்பிற்குப் பிறகு, ஆளுநர் பதவியில் இருக்க அவருக்கு உரிமை இல்லை என்றும் ஆளுநர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது,

“ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக ஒரு நிமிடம் கூட ஆளுநர் அலுவலகத்தில் இருக்க முடியாது. ஆளுநருக்கு உரிமை இல்லை. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய அதிகாரபூர்வமாக நோட்டீஸ் கொடுத்தால் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.”

ஜனாதிபதி தனது கையொப்பத்தின் கீழ் அல்லது வழக்கறிஞரின் அதிகாரத்தின் கீழ் ஆளுநரை நியமிப்பார் மற்றும் 04 வது அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் அங்கீகாரம் வரை அவர் பதவியில் இருப்பார். அரசியலமைப்பு இவ்வாறு கூறுவதாக  வில்லி கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும், பல மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த குழு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd