பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்த போதும், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7ஆம் திகதி ராஜினாமா செய்வதாக தெரசா மே அறிவித்துள்ளார்.
லண்டன் நகரில் டவுனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், ‘பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கௌரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.