இன்று சனிக்கிழமை பரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்பதாவது வார ஆர்ப்பாட்டமாகும்.
பரிசின் சோம்ப்ஸ்-எலிசே பகுதியை குறிவைத்திருக்கும் போராளிகள், இம்முறை Cher மாவட்டத்தின் தலைநகரான Bourges பகுதியையும் குறிவைத்துள்ளனர்.
இன்று ஜனவரி 12 ஆம் திகதி இங்கு பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வன்முறைகளும் அதிகமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுக்குள் சோம்ப்ஸ்-எலிசே தவிர்த்து La Défense பகுதியையும் மஞ்சள் மேலங்கி போராளிகள் குறிவைத்துள்ளனர். இங்கு 3,200 பேர் வரை நாளை கூடலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பரிஸ் தவிர,Bordeaux, Marseille, Toulouse, Lyon, Strasbourg, Lille, Nantes, Rennes ஆகிய பெரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதால், பாதுகாப்பும் உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
பரிசுக்குள் 12,000 வரையான அதிகாரிகளும், நாடு முழுவதும் 80,000 அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.