மாலத்தீவுகளின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீப் அப்துல் கஃபூர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் உரிய ஆவணங்களின்றி நுழைய முயன்ற நிலையில் அவர் மீண்டும் மாலத்தீவுக்கே அனுப்பப்பட்டார்.
மாலத்தீவில் வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அகமது அதீப் அப்துல் கஃபூர். 37 வயதான இவர் 2015-ஆம் ஆண்டு அந்நாட்டு ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அவருக்கு 33 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியாவில் தஞ்சமடைய திட்டமிட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி கடல்மார்க்கமாக படகில் இந்தியாவுக்கு ஜூலை 29-ஆம் தேதி நுழைய முயன்றார் கஃபூர். நடுக்கடலிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரிடம் கடலோர காவல் படை அதிகாரிகள் ஆவணங்களை கோரினர். ஆனால் அவரிடம் இந்தியாவுக்கு நுழைய உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் மே தின விழாவில் துப்பாக்கியுடன் கஃபூர் நுழைந்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றிற்கு பயந்து அகமது அதீப் அப்துல் கஃபூர் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் மாலத்தீவுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
மிக இளவயதிலேயே துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.