கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை, மேலும் மோசமடையாமல், அமைதியாகவும் சுமுகமாகவும் தீர்வுகாணப்படும் என்று நம்புவதாக சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
பிரதமர் லீ, கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேற்றுத் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்ப் பிரதமர் அலுவலகம் அது குறித்து அறிக்கை வெளியிட்டது.
அந்த சர்ச்சை பற்றி கனடியப் பிரதமர், லீக்குத் தகவல் அளித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
சட்டத்தை அனைத்து நாடுகளும் மதித்து நடப்பதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் லீ வலியுறுத்தினார்.
குறிப்பாக, வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் கையாளும்போது, அவ்வாறு சட்டத்தை மதித்து நடப்பது அவசியம் என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் கனடாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றியும் இரு நாட்டுப் பிரதமர்கள் கலந்துபேசினர்.
கனடியப் பிரதமர் ட்ரூடோ, கடந்த நவம்பர் மாதம், 33ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அது தொடர்பான சந்திப்புகளிலும் கலந்துகொள்ள, சிங்கப்பூர் வந்திருந்தார்.