இங்கிலாந்து பாராளுமன்றத்தை ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை முடக்கி வைத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் முடிவானது சட்டவிரோதமானது என்று அந் நாட்டு உச்ச நீதமன்றம் அறிவித்துள்ளது.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை 'பிரெக்ஸிட்' என்று அழைத்து வந்தனர். ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.
ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி ராஜினாமா செய்தார் தெரசா மே. அதன் பிறகு பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்ஸன் பிரதமராகப் பதவியேற்றார்.
பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும். பிரெக்ஸிட்டை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் துணிச்சலாக பாராளுமன்றத்தை முடக்கினார்.
செப்டம்பர் 11 ஆம் திகதி முதல் அக்டோபர் 14 ஆம் திகதி வரை பிரிட்டன் பாராளுமன்றம் முடக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதற்கான ஒப்புதலையும் எலிசபெத் மகாராணி வழங்கினார். இதுகுறித்து இங்கிலாந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிண்டா ஹெல் கூறும்போது, பாராளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது.
நியாயமான காரணம் இல்லாமல் இவ்வாறு முடக்குவது அரசியலைப்பு விதிமுறைப்படி பாராளுமன்றம் செயல்படும் திறனை முடக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிரதமர் போரிஸ் ஜோன்ஸனுக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.