இந்தியாவில், ஹரியாணா மாநிலம் சிர்சாவின் கலனவல்லி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜனக்ராஜ். இவரது மனைவியும் மருமகளும் கடந்த 19-ம் தேதி, தங்களது 40 கிராம் தங்க நகைகளை சிறிய பிளாஸ்டிக் வாளியில் கழற்றி வைத்துள்ளனர்.
அதன் அருகிலேயே அமர்ந்து காய்கறிகளை நறுக்கினர். பின்னர், காய்கறிக் கழிவுகளை தவறுதலாக நகைகள் வைக்கப் பட்டிருந்த வாளியில் சேர்த்து வீட்டுக்கு வெளியே குப்பையில் வீசினர். தெருவில் திரிந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்று காய்கறி கழிவுகளை தின்றுவிட்டது. நகைகளை தேடிய ஜனக்ராஜ், சிசிடிவி கேமராவை பரிசோதித்தார். அதில் நகைகளை மாடு தின்றது தெரிய வந்தது. பின்னர், அந்த மாட்டைத் தேடி கண்டுபிடித்து வீட்டில் கட்டி வைத்துள்ளார்.
இதுகுறித்து ஜனக்ராஜ் கூறு கையில், ‘‘கடந்த 10 நாட்களாக அந்த மாட்டை வீட்டுக்கு வெளியே கட்டிவைத்து தீனி போட்டு கண்காணித்து வருகிறோம். சாணத்தில் நகைகள் வெளியே வரும் என்று நம்பிக்கையுடன் உள்ளோம். அதற்கு வாய்ப்பு உள்ளதாக கால்நடை மருத்துவரும் தெரிவித்துள்ளார்.
நகைகள் கிடைக்காவிட்டால் மாட்டை காப்பகத்தில் கொண்டு போய் விட்டுவிடுவோம்’’ என்றார்.