தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மூதாட்டி மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஆரோக்கியத்துடன் கம்பீரமாக உலா வரும் அவரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகேயுள்ள சூசைநகரில் மரியசெல்வம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவருக்கு வயது 85.
இவரின் கணவர் சுந்தரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ராஜமணி, ராஜகனி என்ற 2 மகன்களும் கனி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளி ஊர்களில் வசித்து வருகின்றனர்.எனவே மூதாட்டி மரியசெல்வம் தனியாக வசித்து வருகிறார்.
பிழைப்புக்கு வழி தெரியாமல் சாலையோரங்களில் கிடைக்கும் பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்பு, கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து பழைய இரும்புக்கடைகளில் விற்று அன்றாட வாழ்கையை நடத்தி வருகிறார்.
இவருக்கு சிறு வயது முதலே மண் என்றால் அலாதி பிரியமாம். அதனை அப்படியே எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டு விடுவாராம். நாளடைவில் அதனையே உணவாக உட்கொள்ளவும் ஆரம்பித்து விட்டார் மரியசெல்வம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் மண் சாப்பிடுவதை மரியசெல்வம் நிறுத்தவில்லை. மழை காலங்களில் வெளியில் சென்று மண் எடுக்க முடியாது என்பதால் வீட்டில் மணலை சேகரித்து வைத்து பின் அதனை சல்லடை வைத்து சலித்து சாப்பிடுகிறார்.
இருப்பினும் மரியசெல்வம் மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு எதுவும் ஏற்பட்டதில்லை. தள்ளாத வயதிலும் அசராமல் மண் சாப்பிட்டு கம்பீரமாக நடைபோட்டு உலா வரும் மூதாட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடனேயே பார்க்கிறார்கள்.