ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அவர்களின் வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.
சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை சட்டத்தரணி மூலம் தாக்கல் செய்துள்ளார். இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளார்.
தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தரப்பு சட்டத்தரணி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுக்கூட்டத்திலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் இவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க தங்கள் தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு உறுதியாக உள்ளது.
ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காத பட்சத்தில் தங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்த உள்ளதாக சசிகலா தரப்பு சட்டத்தரணி ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் தரப்பு விளக்கங்களை அவ்வப்போது அவரது சட்டத்தரணிகள் ஆணையத்துக்கு அளித்து வருவதால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த தேவையில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் மூலம் சசிலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தும் முடிவையும் ஆணையம் கைவிட்டுள்ளது தெரிகிறது.
அதேவேளையில் அப்பல்லோ நிர்வாகமும், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்காமல் ஆணையம் தனது விசாரணையை முடிக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளது.
ஆனால், பெப்ரவரி 24ஆம் திகதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.