web log free
September 16, 2024

சபரிமலையில் வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும்  அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  56 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலை கோவிலில் உள்ள தடையை நீக்கியது.

இதற்கு பல்வேறு தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில், கேரள அரசு உறுதியாக இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளை சேர்ந்தோர் சபரிமலை கோவிலில் திரண்டனர். சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபரிமலை பகுதியில் மட்டுமின்றி கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.


இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. . இவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில் இதன் மீதான தீர்ப்பினை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.எஃப், நாரிமன், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கியது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும்  அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  56 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.