இந்தியாவின் டெல்லியில் நிர்பயா என்றழைக்கப்படுகிற 23 வயதான மருத்துவ மாணவியை ஏழாண்டுகளுக்கு முன்னர் கூட்டுவன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தமைக்காக மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள நான்கு குற்றவாளிகளும் இம்மாதம் 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவர் என டெல்லி நீதிமன்றம் தனது நான்காவது தூக்கிலிடும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள பவன் குப்தாவின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று நிராகரித்த நிலையிலேயே இன்று இவர்களுக்கான தூக்கிலிடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்தின் நிராகரிப்புடன் மரண தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பிப்பதற்கான அனைத்துத் தெரிவுகளும் முடிவுக்கு வந்திருந்தன.
குற்றவாளிகளின் அனைத்து சட்ட ரீதியான தெரிவுகளும் முடிவடைந்து விட்ட டெல்லி அரசாங்கத்தால் கூறப்பட்டதைத் தொடர்ந்தே இம்மாதம் 20ஆம் திகதியை தூக்கிலிடுவதற்கான புதிய திகதியாக மேலதிக அமர்வு நீதிபதி தர்மேந்திரா ரானா தீர்மானித்திருந்தார்.
இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியை நீதிமன்றம் நிர்ணயிப்பதற்கு சட்ட ரீதியாக எத்தடையும் இல்லை என நான்கு மரண தண்டனைக் குற்றவாளிகளின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.