web log free
April 19, 2025

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கொரோனா

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரசா கிலானிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்கெனவே 132,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,551 பேர் உயிரிழந்துள்ளனர்.

67 வயதான யூசுஃப் ரசா கிலானி ஊழல் வழக்கு விசாரணைக்காக சென்றுவந்த பிறகு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் காசிம் கிலானி அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இம்ரான் கான் அரசுக்கு நன்றி. உங்களால் என் தந்தையின் உயிர் ஆபத்தில் இருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரும், முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான ஷெஹ்பான் ஷரிஃபுக்கும் ஜூன் 11ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷாஹித் அஃப்ரிடிக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

பாகிஸ்தானில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132,405ஐ தொட்டுள்ளது. மொத்தம் 2551 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,850 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Last modified on Tuesday, 16 June 2020 01:00
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd