லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய - சீன துருப்புகள் இடையே இதற்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்ட லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15/16 அன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 17 இந்திய ராணுவ துருப்புகள் அங்கு நிலவும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவியதால் உயிரிழந்தனர்.
இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ துருப்புகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மோதலில் மூன்று இந்திய ராணுவ துருப்புகள் உயிரிழந்ததாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் ராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சீன ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் அந்த செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதை மத்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே இந்தப் பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்