இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி முழுவடிவம் பெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படவில்லை.
அதற்குள் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பாமக 7 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி, பாஜக 5 மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொடர்ந்து தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
அதிமுக பாஜக கூட்டணியைத் தொடர்ந்து தமிழக கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கூட்டணி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் கூட்டணி முழு வடிவம் பெறும் என்றார்.
மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.