web log free
December 04, 2024

8-வது நாளாக துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிக்காமல், தொடர்ந்து எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில்தான் காஷ்மீர் புலவாமா பகுதியில் கடந்த 14-ந் திகதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான கார் குண்டு தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் பலியாகினர்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் படையினர், காஷ்மீர் எல்லையில் அத்துமீறி குண்டு வீச்சு நடத்துகின்றனர். பீரங்கி தாக்குதலும் நடத்துகின்றனர்.

தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ் தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது.

அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தினர். எல்லை கட்டுப்பாட்டு கோடுப்பகுதியில் உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் ரஜவுரி மாவட்டம் நவுசேரா செக்டாரில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களில் 6 செக்டார்களில் ஒரே நாளில் 3 தடவை தாக்குதல் நடத்தியது. இதில், மெந்தார் பகுதியில் ஒரு பெண் பலியானார். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.

இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. பதற்றம் தொடருவதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லையையொட்டி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களில் பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பா மாவட்டத்திலும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர்.

இதனிடையே தொடந்து இன்று ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்த துப்பாக்கி சண்டையில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd