அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலின்போது ரஸ்ய அதிபர் புட்டின், அப்போதைய அதிபர் டிரம்புக்கு ஆதரவாகவும், தற்பொதைய அதிபர் ஜோ பைடனை தோற்கடிக்கவும் முயற்சி செய்ததாக அமெரிக்க அரசின் உளவுத்துறை தற்போது தெரிவித்துள்ளது.
2020 தேர்தலுக்கான வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஸ்ய அதிபர் புட்டினும், அவரது நிர்வாகமும் முயற்சி செய்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீதான நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில், ஜோ பைடனையும் இணைத்துக்கொள்ள ரஸ்ய அரசின் உதவியுடன் டிரம்ப் ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டியதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் விவகாரத்தில் தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ரஸ்யா கருத்து தெரிவித்துள்ளது.