அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப்.
அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பல்வேறு பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். அது அமெரிக்க தேர்தலின்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், தன்னுடன் டிரம்ப் பல முறை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார் என்றும், இதுகுறித்து வெளியே சொன்னால் அது ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராக திரும்பும் என்பதால், தனக்கு டிரம்ப் வக்கீல் மைக்கேல் கோஹன் 1 லட்சத்து 30 ஆயிரம் டொலர் பணம் தந்தார் என்றும் கூறி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் ஒரு புகார் எழுந்தது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறவும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா தலையிட்டது என்பதே அந்த புகார். இந்த புகார் குறித்து அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
அந்த விசாரணையில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு டிரம்ப், தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் பணம் தந்தார் என்ற புகாரும் வந்தது. அப்போது டிரம்பின் சட்டத்தரணி மைக்கேல் கோஹன், “ஆமாம், உண்மைதான், ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் தரப்பட்டது” என ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்தியபோதும், டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என்பதை ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவருக்கு பணம் தரப்பட்டது, அந்தப் பணத்தை தனக்கு டிரம்ப் திரும்ப தந்து விட்டார் என்றும் மைக்கேல் கோஹன் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இவை அனைத்தையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கு மத்தியில் பணம் வாங்கிக்கொண்டு, டிரம்ப் பாலியல் உறவு விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக அவருடன் போட்ட ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய நீதிமன்றில் ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கு தொடுத்தார்.
அந்த ஒப்பந்தத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் சார்பில் அவரும், டிரம்ப் சார்பில் அவரது சட்டத்தரணி மைக்கேல் கோஹனும் கையெழுத்து போட்டிருந்தனர். ஆனால் ஒப்பந்தத்தில் தானும், சம்பந்தப்பட்ட டிரம்பும்தான் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்; அவர் கையெழுத்து போடாத நிலையில், அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் ஆட்டீரோ தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ் தொடர்ந்த அவதூறு வழக்கையும் இதே நீதிபதி கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது நினைவுகூரத்தக்கது.